Tuesday, May 26, 2020

பௌத்த வரலாறும் வளர்ச்சியும்


       
                        வினா: பல நாடுகளிலும் இன்று பெரும் அளவில் மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். இந்த நிலை எவ்வாறு நிகழ்ந்தது?

 விடை: புத்தர் இறந்து 150 ஆண்டுகளில் அவருடைய போதனைகள் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. சுமார் கி.மு 262 ஆண்டு மௌரியச் சக்ரவர்த்தி அசோகர் பௌத்த மதத்தைத் தழுவி அவரது இராஜ்ஜியம் முழுவதும் பௌத்த மதம் பரவ வழி வகுத்தார். பெரும்பாலான மக்கள் பௌத்தத்தின் உயர்ந்த ஒழுக்க நியதிகளாலும், அது இந்து சமயச் சாதீய அமைப்பைத் தீவிரமாக எதிர்த்ததாலும் அதன்பால் ஈர்க்கப் பட்டனர். அசோகச் சக்ரவர்த்தியும் ஒரு மாபெரும் ஆலோசனைச் சபையைக் கூட்டிப் புத்த மதத்தைப் பரப்பப் பௌத்தத் துறவிகளைப் பல குழுக்களாக அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாது தொலைதூரத்திலுள்ள ஐரோப்பாவரைக்கும் அனுப்பி வைத்தார். அவற்றுள் இலங்கைக்குச் சென்ற மத போதகர்கள் புத்தமதத்தை அங்கு நிலை நிறுத்தினார்கள். அந்நாட்டில் இன்றும் பெரும்பாலானோர் பௌத்த மதத்தையே பின் பற்றுகின்றனர். வேறுபல பிரசாரகர்களின் குழுக்கள் புத்த மதத்தைப் பரப்ப இந்தியாவின் தென் பகுதிக்கும், மேற்குப் பகுதிக்கும், காஷ்மீரத்திற்கும், தென் பர்மாவிற்கும், தாய்லாந்திற்கும் அனுப்பப் பட்டன. அதன் பின் ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்றைய ஆப்கானிஸ்தானும், வட இந்தியாவின் மலைப் பிரதேசங்களும் பௌத்த மதத்தைப் பின்பற்றின. பின்னர் அங்கிருந்து துறவிகளும் வர்த்தகர்களும் மத்திய ஆசியாவிற்கும் இறுதியாகச் சீனாவிற்கும் பௌத்தத்தைக் கொண்டு சென்றனர். சீனாவிலிருந்து பௌத்தம் கொரியாவிற்கும் ஜப்பானிற்கும் பரவியது.

 பிற நாடுகளிலிருந்து சீனாவில் நுழைந்த பல்வேறு கருத்துக்களுள் பௌத்தம் மட்டுமே அங்கு வேர் விட்டு நிலைத்து நின்றது என்பது சுவாரசியமான ஒரு செய்தியாகும். சுமார் பன்னிரண்டாம் நூற்றாண்டில் பௌத்தம் பர்மா, தாய்லாந்து, லாகோஸ், கம்போடிய போன்ற நாடுகளின் தலையாய மதமானது. அதற்கு இலங்கைத் துறவிகளின் முழு முயற்சியே முக்கியக் காரணமாகும்.


 வினா: திபெத் எப்போது எப்படிப் பௌத்த நாடாகியது?

 விடை: சுமார் எட்டாம் நூற்றாண்டில் திபெத்திய மன்னர் இந்தியாவிற்குத் தூதுவர் ஒருவரை அனுப்பித் பௌத்தத் துறவிகளையும், பௌத்த சமய நூட்களையும் தன் நாட்டிற்குக் கொண்டு வரச் செய்தார். அதிலிருந்து பௌத்தம் அங்கு வளரத் தொடங்கியது. ஆனால் திபெத்தில் அப்போது கடைப்பிடிக்கப் பட்ட போன் மதத்தின் மத குருக்கள் காட்டிய எதிர்ப்பின் காரணமாகப் பௌத்தமதம் உடனடியாகப் பெரும்பான்மை மதமாக மாற  வில்லை. இறுதியில் 11ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து அதிக அளவிலான பௌத்தத் துறவிகளும் ஆசிரியர்களும் திபெத்திற்கு வந்த பிறகுதான் பௌத்தம் அங்கு தன்னை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டது. அப்போதிருந்து திபெத் மிகவும் பற்றுள்ள பௌத்த நாடுகளுள் ஒன்றானது.


 வினா: ஆகப் பௌத்தம் மிகப் பரவலாக விரிவடைந்தது எனக் கூறலாம்.

 விடை: அதுமட்டுமல்ல, தன்னை எதிர் கொண்ட பிற மதங்களை அடக்கி ஒடுக்கியதாகவோ, படைபலத்தால் வெற்றி கொண்டு பௌத்தம் பரப்பப் பட்டதாகவோ கூறப்படும் நிகழ்ச்சிகள் மிகக் குறைவே. பௌத்தம் சாந்தமான வாழ்க்கை முறையைப் போதிப்பதால், கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்வதென்ற எண்ணமே பௌத்தர்களுக்கு முரண்பட்டதாகும்.


 வினா: பௌத்தம் பரவிய நாடுகளைப் புத்த மதம் எவ்வாறு பயனடையச் செய்தது?

 விடை: பிரசாரகத் துறவிகள் மற்ற நாடுகளுக்குச் சென்ற போது அவர்கள் புத்தரின் போதனைகளை மட்டுமல்லாது இந்திய நாகரிகத்தின் உயர்ந்த பண்பாடுகளையும் எடுத்துச் சென்றார்கள். சில பௌத்தத் துறவிகள் சிறந்த மருத்துவர்களாகவும் விளங்கினார்கள். அதுவரை இல்லாத புதுப்புது மருத்துவ முறைகளைத் தாங்கள் சென்ற நாடுகளில் அறிமுகப் படுத்தினார்கள். இலங்கையிலும், திபெத்திலும் மத்திய ஆசிய நாடுகளிலும் எழுத்து முறையை அறிமுகப்படுத்தியது பௌத்தத் துறவிகள் தான். எழுத்து முறை வந்தபின் புதிய புலமையும் எண்ணங்களும் மக்களிடையே மலரத் தொடங்கின. பௌத்தம் வருமுன் திபெத்தியரும், மங்கோலியரும் கட்டுப்படாத காட்டுமிராண்டிகளாகவே இருந்தனர். பௌத்தம் அவர்களைச் சாந்தகுணமுள்ளவர்களாகவும் நாகரிகம் மிக்கவர்களாகவும் மாற்றியது. இந்தியாவிலும் உயிர்ப்பலி கொடுக்கும் பழக்கம் குறைந்ததோடு கொஞ்ச காலமே நீடித்தாலும் சாதீயக் கொடுமையின் குரூரமான பழக்கங்களும் சற்றுத் தளர்ந்தது. இன்றும்கூட பௌத்தம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வளர வளர, நவீன மேற்கத்திய மனோ தத்துவ இயல், பௌத்தத்தின் மனித மனத்தின் ஆழ்ந்த அறிவினால் பாதிப்படையத் துவங்கியுள்ள


 வினா: பௌத்தம் இந்தியாவில் மறைந்ததற்குக் காரணம் என்ன?

 விடை: இந்த வருந்தத்தக்க நிகழ்வுக்கு யாருமே ஏற்கத்தக்க விளக்கத்தை இதுவரை கூற வில்லை. சில வரலாற்று நிபுணர்கள் பௌத்தம் நேர்மையின்றி ஒழுக்கமற்றுப் போனதால் மக்கள் அதை எதிர்க்கத் தொடங்கியதாகக் கூறுகின்றனர். வேறு சில நிபுணர்கள் இந்து மதத்தின் பல கொள்கைகளைப் பௌத்தம் அப்படியே ஏற்றுக் கொண்டதால் பௌத்தத்துக்கும் இந்து மதத்திற்கும் வேறுபாடே இல்லாமல் போய்விட்டதாகக் கூறுகின்றனர். இன்னொரு கருத்து அரசர்கள் ஆதரவோடு மாபெரும் விகாரைகள் உருவாகி அதில் துறவிகள் திரள ஆரம்பித்ததால் சராசரி மக்களுடன் இருந்த தொடர்பு முற்றாக அற்றுப் போய்விட்டதாகக் கூறுகிறது. காரணம் எதுவாயினும் 8ஆம் 9ஆம் நூற்றூண்டு இறுதியில் இந்தியாவில் பௌத்தத்தின் செல்வாக்கு மிக வேகமாகச் சரியத் தொடங்கிவிட்டது. 13ஆம் நூற்றண்டில் இஸ்லாமியப் படையெடுப்பின் போது நிகழ்ந்த வன்முறையும் குழப்பமும் பௌத்தத்தை இந்தியாவிலிருந்து அறவே ஒழித்து விட்டது.


 வினா: ஆனால் இன்றும் இந்தியாவில் சில பௌத்தர்கள் வாழ்கின்றனரல்லவா?

 விடை: ஆம். வாழ்கின்றனர். மேலும் 20 ஆம் நூற்றாண்டின் மையப் பகுதியிலிருந்து பௌத்தம் மீண்டும் இந்தியாவில் துளிர்விடத் தொடங்கியுள்ளது. 1956 ஆம் ஆண்டில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் (பாபா சாகேப் அம்பேத்கார் அவர்கள்) அவரது மக்கள், இந்து மதத்தின் சாதிப் பாகுபாட்டால் மிகவும் மோசமாக நடத்தப்பட்ட காரணத்தினால், அதிலிருந்து விலகிப் பௌத்தத்தைத் தழுவினார். அதன் பின்னர் கிட்டத்தட்ட 80 லட்சம் மக்கள் பௌத்த மதத்திற்கு மாறினார்கள். இந்த எண்ணிக்கை இன்றும் வளர்ந்து கொண்டே போகிறது.

No comments:

Post a Comment